மியன்மாரில் தொடரும் வன்முறை; போராட்டக்காரர்கள் ஏழு பேர் பலி
மியன்மாரில் தொடரும் வன்முறையால் இன்றும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியன்மாரில் இராணுவச் சதித் திட்டத்திற்கு எதிரான பலவார ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியாக இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குறித்த ஏழு பேர் இன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், இதன்போது பலர் காயமடைந்ததாக அரசியல், மருத்துவ வட்டாரங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மியன்மாரின் பிரதான நகரமான யாங்கோனின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில், பொலிஸார், துப்பாக்கிச் சூடு, ஸ்டன் கைக்குண்டுகள் வீச்சு மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக்த தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து, அங்கு ஜனநாயக ஆட்சியை வலியறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அந்நாட்டின் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சித் தலைமையின் பெருமளவான பிரதிநிதிகளை இராணுவம் தடுத்துவைத்துள்ளது.
ஏறக்குறைய 50 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் பின்னர் ஜனநாயகத்தை நோக்கிய தற்காலிக முயற்சிகள் முறியடிக்கப்பட்ட தற்போதைய ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உலக நாடுகள் மியன்மாரில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருவதுடன் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதாரத் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


