காதலி திருமணத்திற்கு மறுப்பு ; மின் கோபுரத்தில் ஏறிய இளைஞனால் பரபரப்பு
காதலித்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர், 1.32 லட்சம் வோல்ட் மின்சாரம் பாயும் உயர்மின் அழுத்தக் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் பரிஹார் என்ற இளைஞர், பீகாரின் பாங்கா மாவட்டத்திற்குட்பட்ட ஃபுல்லிடுமர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்குச் சம்மதிக்க மறுத்துள்ளனர்.
12 மணி நேரம் பெரும் பதற்றமான சூழல்
இதனால் அதிருப்தியடைந்த மனோஜ், சனிக்கிழமை அன்று முர்ஹாரா ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள 1.32 லட்சம் வோல்ட் திறன் கொண்ட அதிஉயர் மின்னழுத்தக் கோபுரத்தில் திடீரென ஏறி நின்றுகொண்டு கீழே இறங்க மறுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் இளைஞரைச் சமாதானப்படுத்திப் பாதுகாப்பாக கீழே இறக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு இளைஞர் செவிசாய்க்காததால், சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவரது காதலி ஒலிபெருக்கி (Loudspeaker) மூலமாக அழுதுகொண்டே கீழே இறங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இருப்பினும் இளைஞர் தொடர்ந்து பிடிவாதம் காட்டியதால், சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
இளைஞருக்கு மின்சாரம் தாக்கும் அபாயத்தைத் தவிர்க்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட உயர்மின் அழுத்தப் பாதையின் மின்சார விநியோகத்தை அதிகாரிகள் உடனடியாகத் துண்டித்தனர்.
அதேவேளை, பாங்கா நகரில் மின்தடை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ஜமுய் (Jamui) பகுதியிலிருந்து மாற்று மின்சார விநியோகம் உடனடியாகச் செய்யப்பட்டது.
சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுத் தீவிர மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இருப்பினும், குறித்த இளைஞர் இறுதியாகப் பாதுகாப்பாக மீட்கப்பட்டாரா என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.