தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வீதி நிர்மாணப் பணிகள்
ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை எனவே அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளைத் ஆரம்பிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய கட்டுமான நடவடிக்கைகள்
ருவன்புர அதிவேக வீதி, கஹதுடுவவிலிருந்து ஹொரணை மற்றும் ஹிங்கிரிய வழியாக இரத்தினபுரி வரை அமைக்க முன்மொழியப்பட்டது. இருப்பினும், தற்போதைய அரசாங்கம் முன்னுரிமைப் பட்டியலின்படி புதிய கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், இந்தத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மத்திய அதிவேக வீதியின் குருநாகல்-கலகெதர இடையிலான பகுதிக்கு முன்னுரிமை அளித்து கட்டுமானப் பணிகளைத் ஆரம்பிக்க அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.
நீண்ட காலமாக தடைபட்டுள்ள கடவத்தை - மீரிகம பகுதியின் நிர்மாணப் பணிகளை சீன உதவியுடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடவத்தை-மிரிகம பிரிவின் ஒரு பகுதி, அபிவிருத்திப் பணிகளின் போது இடிந்து விழுந்த நிலையில், தற்போது 7 பில்லியன் ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.