யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில் சமீபத்தில் நிலவிய டிட்வா சூறாவளி காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

48 ஏக்கர் பரப்பளவில், 10 மத்திய ஆடுகளங்களுடன் அமைக்கப்படவுள்ளது
இதன் காரணமாக 2026 ஜனவரி 14 ஆம் திகதி நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்தப் போட்டி உட்பட திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களில் தடங்கல் ஏற்பட்டது.
தற்போது பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பின்னர் குறித்த பரீட்சார்த்தப் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் மைதானத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய முடியும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானமானது 48 ஏக்கர் பரப்பளவில், 10 மத்திய ஆடுகளங்களுடன் அமைக்கப்படவுள்ளதுடன், மைதானத்தின் எல்லை தூரம் 80 மீட்டர்கள் வரை விரிவடையும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 138 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த மைதானம் நிர்மாணிக்கப்படுகிறது.
அதேவேளை இலங்கையின் வட மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதில் இந்த முயற்சி ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதுடன், இது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தேசிய பாதை வேலைத்திட்டத்திற்கும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.