19 வயது யுவதி...வெவ்வேறு இடங்களில் 9 பேருடன் திருமணம்; திடுக்கிடும் தகவல்கள்!
இந்தியாவின் பல மாநிலங்களில், திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து அவர்களை திருமணம் செய்து, சில நாட்களிலேயே நகை மற்றும் பணத்துடன் தப்பிச் செல்லும் 19 வயதுடைய யுவதியின் மோசடிச் செயல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இந்நிலையில் திருமணமுடித்து ஏமாற்றிய யுவதியையும், அவருக்குத் துணையாக இருந்த மற்றுமொரு பெண்ணையும் காவல்துறையினர் விசேட குழுவொன்றை அமைத்து தேடி வருகிறது.

நகை பணத்துடன் ஓட்டம்
இதுவரை கர்நாடகா, ஒடிசா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 8 இளைஞர்களை இந்த யுவதி ஏமாற்றியுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு , ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம், பகுதியைச் சேர்ந்த முத்திரெட்டி வாணி என்ற குறித்த யுவதிக்கும் கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீகாகுளம் பகுதியில் திருமணம் நடந்தது.
திருமணத்தின் பின்னர் மணமகன் வாணியை தன் சொந்த ஊருக்கு தொடருந்தில் அழைத்து சென்ற நிலையில், விசாகப்பட்டினம் தொடருந்து நிலையத்தை அடைந்ததும், கழிவறைக்கு செல்வதாக கூறி தொடருந்திலிருந்து இறங்கிய யுவதி மீண்டும் தொடருந்தில் ஏறியிருக்கவில்லை.

மனைவியை காணாததால் பதறிய இளைஞர் வாணியை தேடியபோதிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்னர், திருமண செலவுக்காக மணமகன் வீட்டார் கொடுத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் வாணி எடுத்துகொண்டு சென்றிருந்தமை தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் குடும்பத்தினருக்கு கர்நாடகா - இச்சாபுரத்தில் உள்ள வாணியின் உறவினரான பெண்ணின் வீட்டுக்கு சென்று பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.
எனினும் அவர் பணத்தை திருப்பி தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின்னர், மணமகன் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் முறைப்பாடளித்த நிலையில், விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சிறுவயதிலேயே தாயை இழந்த வாணி, தந்தையை பிரிந்து, உறவினர்களிடம் வளர்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக மாமியான சந்தியா, வாணியை பயன்படுத்தி திருமணம் என்ற பெயரில் இளைஞர்களை, ஏமாற்றி இந்த மோசடியை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.