இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு இரகசியமாக நடக்கும் சதி திட்டம்!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்களே எனது தலைவர் பதவியைப் பிடுங்குவதில் குறியாக இருந்தார்கள் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோதே மாவை. சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
"குறுக்கு வழியில் தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்தவர்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அவர்களின் சுயநல நடவடிக்கைகளால்தான் எமது கட்சி பலவீனமானது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழரசுக் கட்சியை முடக்க வேண்டும் என்று தென்னிலங்கை விரும்பியது. எனினும், நானும் முன்னாள் தலைவர் சம்பந்தனும் தமிழரசுக் கட்சியைப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பாதுகாத்தோம்.
இதெல்லாம் எமது கட்சியைத் தற்போது முடக்க முயலும் சூழ்ச்சிக்காரர்களுக்கு, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் வந்து அரசியல் முகவரி தேடிய இந்தச் சூழ்ச்சிக்காரர்கள், கட்சியை முடக்க முயல்வது அசிங்கமானது. அவர்கள் நன்றி மறந்தவர்கள். அவர்களின் எண்ணம் நிறைவேற நாம் ஒருபோதும் இடமளியோம் எனவும் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.