ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு இழப்பீடு; துருக்கி எயார்லைன்ஸ் வருத்தம்
விமானத்தில் எடுத்து வரப்பட்டபோது உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தமை தொடர்பில் துருக்கி எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நிறுவனத்திற்குள் முறையான உள்நாட்டு விசாரணையை நடத்தி, விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைச் சரியாக மதிப்பீடு செய்ய துருக்கி எயார்லைன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட வீரருக்கு விரைவாக உரிய இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.
சர்வதேச அரங்கில் இலங்கையின் பெருமையை உயர்த்திய விளையாட்டு வீரரின் உபகரணங்கள் சேதமடைந்த விவகாரத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நேரடியாக தலையிட்டு கவனம் செலுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.