ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் தகவல்களை மறுக்கும் குடும்பத்தினர்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஷிரந்தி ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையிலிருந்தே நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை
அத்துடன் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு எந்தவொரு அழைப்பாணையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென குறித்த அழைப்பாணை கடிதத்தைக் கொண்டுவந்து ஷிரந்தி ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர் விவரித்தார்.
முன்னதாக FCID யினால் ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே அக்கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது