அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்வு ; வழக்குத் தீர்ப்புக்காகக் குடும்பம் காத்திருப்பு
சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த கல்முனை - நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தொலைபேசி ஊடாகத் தமக்கு அறிவித்துள்ளதாக அனோஜனின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணையின் பின்னரே எமக்கு முழுமையான நிம்மதி கிடைக்குமா இல்லையா என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவுதி அரேபிய நீதிமன்றினால் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்துக் குடும்பத்தினரின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜனின் இல்லத்திற்கு விஜயம் செய்தபோதே அவரது சகோதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று அனோஜனின் தாயார், தந்தையார், சகோதரர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் அனைவரும் நற்பிட்டிமுனையில் உள்ள தமது வீட்டில் கூடியிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அனோஜனின் சகோதரன் மேலும் தெரிவிக்கையில்,"எனது அண்ணனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ள விடயம் குறித்துப் பிரதி வெளிநாட்டு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தொலைபேசி மூலம் எம்மைத் தொடர்பு கொண்டு நேரில் தெரிவித்தார்.
இது எமக்கு ஓரளவு ஆறுதலைத் தந்த போதிலும், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி அண்ணனின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்கு விசாரணையின் முடிவுகள் வெளிவந்த பின்னரே எமது குடும்பத்திற்குப் பூரண நிம்மதி கிடைக்குமா என்பது தெரியவரும்" எனத் தெரிவித்தார்.
அனோஜனின் விடுதலைக்காகவும் உயிரைக் காப்பதற்காகவும் இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்குக் குடும்பத்தினர் தமது நன்றிகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.