அனோஜனின் மரண தண்டனை இரத்து; ரிஷாட் பதியுதீன் வரவேற்பு
சவூதி அரேபியாவில் இலங்கையின் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதாகபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் அனோஜனின் குடும்பத்தினருக்கு மீண்டும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் முக்கியமான முன்னேற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அனோஜனுக்கு எஞ்சியுள்ள சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து, அவர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டு பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்ப வேண்டும் எனத் தொடர்ந்து நம்பிக்கையுடன் பிரார்த்திப்பதாகக் கூறினார்.
இந்த விவகாரத்தில் ஆதரவளித்த சவூதி அரேபிய அரசாங்கம், இலங்கை அரசாங்கம், எதிர்க்கட்சித் தலைவர், சிவில் சமூக அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள் உள்ளிட்ட நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.
கடினமான இந்தக் காலகட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட கூட்டு முயற்சி, மனிதாபிமானம் மற்றும் ஒற்றுமை ஆகியவை அளப்பரியவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள் நபிகள் நாயகம் முஹம்மது உயிரைவிட மேலாக நேசிப்பதாகவும், அந்த அன்பையும் மதிப்பையும் நிலைநாட்டுவதில் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சட்டபூர்வமான மற்றும் அமைதியான வழிமுறைகளின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வதற்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் அவர் கூறினார்.
இந்த முன்னேற்றம் அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புதிய நம்பிக்கையையும் மன அமைதியையும் அளித்து, இந்த விவகாரம் சாதகமான முறையில் முழுமையாக முடிவடைய வழிவகுக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்