வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலத்துக்கு குழு அங்கீகாரம் ; எம்.பி சிறிதரன் எதிர்ப்பு
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் தொடர்பான சட்டமூலத்துக்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும், குறித்த சட்டமூலத்துக்கு குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்திலேயே விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த சட்ட ஏற்பாடுகள் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை இன ரீதியாக இலக்குவைத்து கொண்டுவரப்படவில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2178ஆம் இலக்கத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைத் தடுப்பதும், ஒடுக்குவதும் இதன் பிரதான நோக்கமாகும்.
இலங்கைப் பிரஜையொருவர் அல்லது வெளிநாட்டுப் பிரஜையொருவர் இலங்கையில் தங்கியிருக்கும்போதோ அல்லது வெளிநாடொன்றில் குற்றச்செயலில் ஈடுபட்டு, அது அந்த நாட்டின் சட்டத்தின் கீழும் குற்றமாகக் கருதப்படும் பட்சத்திலோ, இந்தச் சட்டத்தின் ஊடாக இலங்கையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல், அவற்றைத் திட்டமிடுதல், தயார்செய்தல், பங்குபற்றுதல் மற்றும் பயங்கரவாதப் பயிற்சிகளை வழங்குதல் அல்லது பெறுதல் உள்ளிட்டவை இந்தச் சட்டத்தின் கீழ் குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி முதலாம் மதிப்பீட்டுக்காக இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சுரங்க ரத்னாயக்க, திலின சமரக்கோன், விஜேசிறி பஸ்நாயக்க உள்ளிட்டோருடன் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.