கொழும்பில் இன்று முதல் அமுலாகும் விஷேட போக்குவரத்து திட்டம்
நாட்டின் 78ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஒத்திகைகள் மற்றும் விழா காரணமாக, கொழும்பு நகரில் இன்று (30) முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகைகள் மற்றும் பிரதான விழா நடைபெறும் நாட்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பின்வரும் நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர அட்டவணை
போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் தினங்களும் நேரங்களும்: 30, 31 மற்றும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதிகளில் சுதந்திர தின ஒத்திகை பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
இதன்போது முற்பகல் 7.45 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சுதந்திர சதுக்கத்தைச் சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
பெப்ரவரி மாதம் 01 அன்றைய தினம் அதிகாலை 5.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை போக்குவரத்துத் தடைகள் நடைமுறையில் இருக்கும்.
சுதந்திர தின விழாவைக் முன்னிட்டு 04 அதிகாலை 5.00 மணி முதல் விழா நிறைவடையும் வரை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகள் அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.