உணவு ஆசை காட்டி கொடூரம் ; 6 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை
இந்தியத் தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியிலுள்ள பஜன்புரா (Bhajanpura) பகுதியில், 6 வயது சிறுமி ஒருவர் மூன்று சிறுவர்களால் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 18 ஆம் திகதி மாலை வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, அவருக்குத் தெரிந்த அயலவர்களான மூன்று சிறுவர்கள் உணவளிப்பதாகக் கூறி ஆசை காட்டி அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அச்சிறுமியிடம் அத்துமீறி நடந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தன்று சிறுமி இரத்தம் தோய்ந்த நிலையில் அழுதுகொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
முதலில் விழுந்துவிட்டதாகக் கூறினாலும், தாயின் தொடர் விசாரணையில் தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையில் முறைப்பாடு செய்ததையடுத்து, போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 10 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
16 வயதுடைய பிரதான சந்தேகநபர் தப்பியோடி பீகார் மாநிலத்தில் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. அவரைத் தேடி விசேட காவல்துறை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றம் செய்தவர்கள் சிறுவர்களாக இருந்தாலும், அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனச் சிறுமியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தற்போது அந்தச் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.