மாறுவேடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் ; உதவி புரிந்தவருக்கு நேர்ந்த கதி
கரையோர பொலிஸ் பிரிவின் ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர், கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் மற்றும் சிறுமி ஒருவர் காயமடைந்து கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆரம்பக்கட்ட விசாரணை
முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
அதன்படி, இத்துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளால் ஹெட்டியாவத்தை பகுதியில் நேற்று பகல் கைது செய்யப்பட்டதுடன், இதன்போது முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 63 வயதுடைய கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் இன்று (30) புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.