மருத்துவர் வீட்டில் கொள்ளை; வழி நடத்திய இளம் பெண்; விசாரணையில் பகீர் தகவல்!
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, வைத்திய உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த அங்கொட ரோசி என அழைக்கப்படும் பெண்ணின் தலைமையிலான மூவர் அடங்கிய கொள்ளைக் கும்பலை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வைத்தியரின் வீட்டில் இருந்த ஸ்டெதாஸ்கோப் (Stethoscope) உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் இந்தக் கும்பலால் திருடப்பட்டுள்ளன.

27 வயதுடைய அங்கொட ரோசி
கடந்த 16ஆம் திகதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளைக் கும்பலை 27 வயதுடைய அங்கொட ரோசி என்ற பெண் வழிநடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. அங்கொட ரோசி , ஐஸ் போதைப்பொருள் பாவனைக்குத் தீவிரமாக அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நவகமுவ, கடுவலை மற்றும் அங்கொட ஆகிய பகுதிகளில் திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அங்கொட பகுதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.