வளைகுடா போர்; இலங்கையில் மின் உற்பத்திக்குச் சிக்கல்!
நாட்டில் மின்சாரத்தடை ஏற்படாது என அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும், மின் உற்பத்திக்கான ஃபர்னஸ் எண்ணெய் (Furnace oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றை உற்பத்தி செய்யும் சுத்திகரிப்பு நிலையம், மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக ஏப்ரல் நடுப்பகுதியில் மூடப்பட வேண்டியிருக்கும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண நேற்று (22) தெரிவித்தார்.
நாட்டில் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு ஏப்ரல் நடுப்பகுதி வரை மட்டுமே சுத்திகரிப்பு நிலையத்தை இயக்க போதுமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பாரதூரமான சிக்கலாகும்
90,000 தொன்கள் கொண்ட இரண்டு மசகு எண்ணெய் கப்பல்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அடுத்த கப்பல் ஜூன் 19 மற்றும் 20 ஆம் திகதிகளிலேயே வரவுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டால், இரவு நேர மின் உற்பத்தியை டீசலைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இது ஒரு பாரதூரமான சிக்கலாகும். அவசரத் தேவையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஃபர்னஸ் எண்ணெய் கப்பல் ஏப்ரல் 12 அல்லது 13 ஆம் திகதி வரவுள்ளது.
இருப்பினும், நெப்தாவை கொள்வனவு செய்ய முடியாது என்பதால், அதற்குப் பதிலாக அதிக விலையுள்ள டீசலை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக இரவு நேரங்களில் ஒரு மின்விளக்கையாவது அணைத்து ஒத்துழைப்பு வழங்கினால், இந்த நிலைமையை மேலாண்மை செய்ய முடியும். அடுத்த மாதம் மின்சாரத்தடை விதிக்க வேண்டிய தேவை இருக்காது என தெரிவித்தார்.
அதேவேளை உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அரம்கோ, ஏப்ரல் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை ஆசிய நாடுகளுக்குக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதகவும் கூறப்படுகின்றது.
மத்திய க்ழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக பல நாடுகளிலும் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.