கொழும்பில் வீடுகளை வாடகைக்கு பெறுவதில் சிரமம் ; இராதாகிருஷ்ணன் எம்.பி
நாட்டில் சீனர்களின் ஆதிக்கத்தால் கொழும்பில் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் அங்குள்ள மக்களால் வீடுகளை வாடகைக்கு பெறவோ அல்லது சொத்துக்களை கொள்வனவு செய்யவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி இந்த நாட்டில் வாழும் மூவின மக்களுக்கும் உரிமையுடன் வாழ்வதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டில் 30 வருடங்களாக யுத்தம் நடந்தது. யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கில் இருந்த அதிகளவான தமிழர்கள் இலங்கையில் இருக்க முடியாமல் வெளிநாடுகளுக்கு சென்றனர்.
இந்நிலையில் தற்போது துறைமுக நகரம் என்பதனை உருவாக்கியதன் மூலம் சீனர்கள் அதிகளவில் நாட்டுக்கு வந்துள்ளனர். இதனால் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு பெற்றுக்கொள்ள முடியவில்லை. சாதாரணமாக வியாபாரம் செய்ய முடியவில்லை.
காரணம் சீனர்கள் அதிகளவிலான விலைக்கு வாங்கவும் தயாராக இருக்கின்றனர். ஒரு இலட்சம் பெறுமதியான ஒன்றை மூன்று இலட்சத்திற்கு வாங்கவும் தயாராக இருக்கின்றனர்.
இவர்கள் வந்து கூடுவதால் இங்குள்ள தமிழர்கள்,முஸ்லிம்களுக்கு மற்றும் சிங்களவர்களுக்கு எந்த சொத்துக்களையும் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இதனால் இதனை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் எமது மூவினத்தவர்களும் இங்கு இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்பதுடன், இன்னுமொரு நாட்டைச் சேர்ந்த சீனர்களை இங்கு உட்புகுத்தி, அவர்களுக்கு முதலிடம் கொடுப்பதிலும், அவர்களின் வர்த்தகங்களை விஸ்தரிப்பதிலும் பிரச்சினையில்லை.
ஆனால் நாங்களும் இந்த நாட்டில் உரிமையாக வாழ வேண்டும் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என்றார்.