அக்குரணை கோர விபத்து; சிமெந்து லொரி சாரதிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கண்டி – மாத்தளை ஏ9 வீதியில் அக்குரணை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிமெந்து லொரியின் சாரதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குரணை, குருகொட சந்தியில் திங்கட்கிழமை 19ஆம் திகதி காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோர விபத்து
அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த சிமெந்து ஏற்றிய பல்கர் ரக லொரி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல வாகனங்களுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் அலவத்துகொட மற்றும் அக்குரணையைச் சேர்ந்த 38, 51 வயதுடைய இரு ஆண்களும், மாத்தளை மற்றும் அக்குரணையைச் சேர்ந்த 16, 28 வயதுடைய இரு பெண்களுமாக நால்வர் உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த 6 பேர் தொடர்ந்து கண்டி மற்றும் அக்குரணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[MFKISW5 \]
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கல்கமுவையைச் சேர்ந்த 46 வயதுடைய லொரி சாரதி கைதுசெய்யப்பட்டு, நேற்றைய தினம் (20) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சம்பவம் இடம்பெற்ற போது சாரதி மதுபானம் அருந்தியிருக்கவில்லை என மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ள தாக போக்குவரத்து கட்டுபாடு மற்றும் வீதிபாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாகன கோலாறு அல்லது தூக்க கலக்கம் காரணமாக விபத்து சம்பவித்துள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், வாகன இயந்திரக் கோளாறுகளைக் கண்டறிய மோட்டார் வாகன பரிசோதகர் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் பெறப்படவுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.