கொழும்பு குடியிருப்பு தீவிபத்து; காரணம் இதுவா?(Photos)
கொழும்பு - பாலத்துறை பகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் நேற்றைய தினம் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சுமார் 80 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
அத்துடன், பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் மெழுகுவர்த்தி காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
முகத்துவாரம் - கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே இந்த தீப்பரவல் இடம்பெற்றிருந்தது.
கட்டுப்பாட்டிற்குள் வந்த தீ
இதனை தொடர்ந்து பொலிஸார், இராணுவத்தினர், கொழும்பு மாநகரசபை தீயனைப்புப் படையினர் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்திருந்தார். ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
தற்காலிக இடங்களில் தங்க வைப்பு
இதனையடுத்து தீ விபத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் களனி நதி விஹாரை மற்றும் முவதர உயன அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை விபத்தானது போதைப்பொருள் பாவனையாளர்கள் பயன்படுத்திய மெழுகுவர்த்தியின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.