விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த வர்த்தகர்; துணி என பார்த்தால்....
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட விலங்குத் தோல்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த, 37 வயதுடைய கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த முதலைகள், மலைப்பாம்புகள்
சந்தேக நபர், தனது பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த முதலைகள், மலைப்பாம்புகள் மற்றும் ஏனைய ஊர்வனவற்றின் பதப்படுத்தப்பட்ட மற்றும் வர்ணம் பூசப்பட்ட 19 விலங்குத் தோல் துண்டுகள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த பொருட்களை 'துணி வகைகள்' எனக்கூறி, அதிகாரிகளை திசைதிருப்ப சந்தேகநபர் முயற்சி செய்த போதிலும், சுங்க அதிகாரிகளின் நுணுக்கமான சோதனையில் இவை கைப்பற்றப்பட்டன.
விலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிதிகளின் கீழ் இந்த கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.