மீன்கள் வாங்கும் போது இந்த 5 விஷயங்களை கவனித்து வாங்குங்கள்!
கடல் மீன்களை உண்பதால் இதயம் காக்கப்படுவதுடன், மூளை வளர்ச்சி மேம்பட்டு, உடலுக்குத் தேவையான அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கின்றன.
அதுமட்டுமல்லாது இதய ஆரோக்கியம்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

மூளைத் திறன்: ஞாபக சக்தியை அதிகரித்து, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைச் மேம்படுத்துகிறது. அயோடின் சத்து: தைராய்டு சுரப்பி சீராக இயங்கவும், ஹார்மோன் உற்பசிக்கும் உதவுகிறது.
புரதச் சத்து: தசைகளின் வளர்ச்சிக்கும், உடலின் திசுக்கள் சீரமைக்கப்படுவதற்கும் உயர் தரப் புரதம் தருகிறது.
வைட்டமின் டி: எலும்புகளை வலுவாக்கத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்களை வழங்குகிறது .
ஆனால் பலருக்கும் நல்ல மீன்களை எப்படி தேர்வு செய்வது என்பதில் குழப்பங்கள் இருக்கலாம். மீன்களை வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள் என சில விஷயங்கள் உள்ளன.
கீழ்வரும் அந்த 5 விஷயங்களை, நீங்களும் மீன் வாங்க செல்லும் போது கவனித்துப் பாருங்கள். இவை சரியாக இருந்தால், பயப்படாமல் வாங்குங்கள்.

முதலில், மீனின் வாசனையை பாருங்கள், புதிதாக பிடிக்கப்பட்ட மீன்கள் என்றால், கடல் மணமோ ஆற்றின் மணமோ அதில் இருக்கும். அதேபோல அமோனியா வாசனையோ, புளித்தது போன்ற வாசனையோ இருந்தால் அது பழைய மீனாகவோ அல்லது பதப்படுத்தப்பட்ட மீனாகவோ இருக்கக்கூடும். அவற்றை தவிர்ப்பதே நல்லது.
அடுத்தது, மீனின் கண்களை பாருங்கள், அவை பிரகாசமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். ஒருவேளை அவை மங்கலாகவோ, குழி விழுந்தோ காணப்பட்டால் அந்த மீன்களை தவிர்த்துவிடுங்கள்.
நீங்கள் வாங்கும் மீன், அதிக நேரம் ஐஸ் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தால், அந்த ஐஸ் பாக்ஸ் சுத்தமானதாக இருக்கிறதா என்பதை பாருங்கள். இல்லையெனில், அதன் மூலமாக கூட உங்களுக்கு தொற்றுப் பிரச்சனைகள் வரலாம். மட்டுமில்லாமல் சுத்தமான ஐஸ்களுக்கு மத்தியில் வைக்கப்படும் மீன்கள், நீண்டநேரம் புத்துணர்வோடு இருப்பதுடன், அதன் தரமும் சுவையும் பாதுகாக்கப்படும்.

சிலர் கடைகளுக்கு சென்று மீன் வாங்குவதற்கு பதிலாக, சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களிலோ அல்லது ஆன்லைனிலோ பேக் செய்யப்பட்ட மீன்களை வாங்குகின்றனர். அப்படி வாங்கும் போது, மீனில் அதிகப்படியான திரவம் இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் மீனின் உறைநிலை நீக்கப்பட்டு, மீண்டும் அவை உறைய வைக்கப்பட்டிருந்தால்தான் அப்படி நடக்கும். இது மீனின் தன்மை மற்றும் சுவையை பாதிக்கும் என்பதால் தவிர்ப்பதே நல்லது.
மீனின் செவுள்களின் நிறத்தை கவனியுங்கள், அவை நல்ல சிவப்பு நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ இருந்தால், அந்த மீன் புத்துணர்ச்சியோடு இருப்பதாக பொருள். மாறாக, பழுப்பு அல்லது சாம்பல் நிறச் செவுள்கள் இருந்தால் அந்த மீன் புத்துணர்ச்சியுடன் இல்லை என பொருள்.