நிலக்கரி கொடுக்கல் வாங்கல் விசாரணை ஆணைக்குழு பணிகள் நிறைவு
நிலக்கரி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதன்படி, இதன் இறுதி அறிக்கை அடுத்த மாதம் ஆரம்பத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஆணைக்குழுவின் பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இதனிடையே, நிலக்கரி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் கடந்த (04) ஆம் திகதி விசாரணை நடத்தி வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து கொண்டது.

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிலக்கரி ஆணைக்குழுவினால் ரணவக்கவுக்கு அண்மையில் அறிவித்தல் (Notice) அனுப்பப்பட்டிருந்தது.
அதற்கமையவே அவரிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அதன் வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பிக்க ரணவக்க 2010 ஏப்ரல் 23 முதல் 2013 ஜனவரி 28 வரையிலும், பின்னர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கீழ் 2015 ஜனவரி 12 முதல் 2015 ஆகஸ்ட் 17 வரையிலும் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
இதனிடையே, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான எம்.சி.சி. பெர்னாண்டோவும் சத்தியக்கடதாசி (Affidavit) மூலம் ஆணைக்குழுவிடம் கருத்துக்களைச் சமர்ப்பித்துள்ளார்.
தற்போது வெளிநாடொன்றில் இருக்கும் பெர்னாண்டோ, இலங்கை மின்சார சபையின் தலைவராகவும் ஒரு காலத்தில் பணியாற்றினார்.
நிலக்கரி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆணைக்குழு 72 பிரதானிகளிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதுடன், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 370 ஆகும்.
உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்கவின் தலைமையில் இயங்கும் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெதிகே மற்றும் மேல்நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் பணியாற்றுகின்றனர்.