தமிழர் பகுதியில் உதைபந்தாட்ட போட்டியில் மோதல் ; பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கிளிநொச்சி – பூநகரி, கிராஞ்சி செந்தாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின் போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற குறித்த இறுதிப் போட்டியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.

போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலைமை கட்டுக்கடங்காத வகையில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மைதானத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.
மோதல் தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாதுகாப்பாக சம்பவ இடத்திலிருந்து வெளியேறியதாக போட்டியை பார்வையிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.