யாழில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை ; பொலிசாரை அதிர வைத்த இரு சிறுவர்கள்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி பகல் வேளையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளே நுழைந்த இருவர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, கண்காணிப்பு கமரா காட்சிகளை ஆராய்ந்ததன் மூலம் சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவனும், 19 வயது இளைஞனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் வல்லைச் சந்தியிலும் மற்றையவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், வீட்டினுள் நுழைந்த பின்னர் அங்கு அதிகளவு பணம் இருப்பதை நெடுங்கேணியைச் சேர்ந்த ஒருவருக்கு காணொளி அழைப்பின் மூலம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, முழுப் பணத்தையும் எடுத்துவருமாறு அவர் அறிவுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பணம் நெடுங்கேணிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள காணியொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் யாழ்ப்பாணம் திரும்பியபோதே இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நெடுங்கேணியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோதும் அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இருவரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.