துப்பாக்கி அனுமதிப்பத்திர தாரர்களுக்கு புதிய கட்டுப்பாடு ; பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கி அனுமதிப்பத்திரதாரர்கள் தங்களது துப்பாக்கிகளின் செயல்பாட்டுத்திறன் மற்றும் விபரங்களை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திர புதுப்பித்தலுக்கு இணங்க, அனுமதிப்பத்திரத்தைப் பெற்று அரை வருடம் (ஆறு மாதங்கள்) பூர்த்தியாகும்போது, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு துப்பாக்கியைச் சமர்ப்பித்து, துப்பாக்கியின் செயல்திறன் மற்றும் அதன் இலக்கம் ஆகியவை அனுமதிப்பத்திர இலக்கத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை ஆராய்ந்து, அதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு சபையால் அனைத்து தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கி அனுமதிப்பத்திரதாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு அரை வருடத்துக்கும் ஒருமுறை தன்ப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கி அனுமதிப்பத்திரதாரர்களின் துப்பாக்கிகள் மற்றும் அனுமதிப்பத்திரங்கள் இவ்வாறு பரிசோதிக்கப்பட்டு, குறித்த சான்றிதழை வழங்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2026ஆம் ஆண்டிற்குரிய அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்து அரை வருடம் நிறைவடைந்தவுடன், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு துப்பாக்கியைச் சமர்ப்பித்து, அதன் செயல்பாட்டுத்திறன் மற்றும் இலக்க ஒப்பீட்டுச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு தொடர்புடைய அனைத்து அனுமதிப்பத்திரதாரர்களுக்கும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.