பிள்ளையானுக்கு சிஐடியினர் கடும் உத்தரவு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நாளை (20) வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் உத்தரவிட்டுள்ளனர்.
சனல் 4 இன் வீடியோவில் பிள்ளையானின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து அவரது வாக்குமூலத்தை பெறுவதற்காகவே சிஐடியினர் அவரை அழைத்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பதாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா சனல் 4 இல் கூறியமை தொடர்பாக பிள்ளையான் விசாரிக்கப்பட உள்ளார்.
ஆசாத் மௌலானா வெளியிட்ட தகவலில், 2019 ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கு முன்னர் இலங்கை ராணுவ உளவுத்துறையினர் – ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளைச் சந்தித்ததாக மௌலானா குற்றம் சாட்டினார்.
இந்த சந்திப்பு கிழக்கில் இடம்பெற்றதாகவும், அதில் தானும் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஆசாத் மௌலானா குறிப்பிட்டார்.
அதேவேளை தற்போது வெளிநாடுகளில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் மேற்படி தகவலை பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.