இலங்கை தொடர்பில் சமந்தா பவரின் கருத்திற்கு பொங்கியெழுந்த சீனா!
இலங்கை சீனா ஒத்துழைப்பு எப்போதும் இலங்கை தலைமையிலான – இலங்கையின் கொள்கைகளையே பின்பற்றுகின்றதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் (Zhao Lijian) தெரிவித்துள்ளார்.
யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவரின் (Samantha Power) கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை கூறினார்.
அனைத்து ஒத்துழைப்பு திட்டங்களும் முழுமையான விஞ்ஞானரீதியிலான ஆராய்ச்சி மற்றும் முழுமையான மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் , எந்த அரசியல் நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை சீன ஒத்துழைப்பு இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்துள்ளது இலங்கை மக்களிற்கு குறிப்பிடத்தக்க அனுகூலங்களை வழங்கியுள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் (Zhao Lijian) குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கையின் வெளிநாட்டுக்கடன்கள் பல கூறுகளை கொண்டது என தெரிவித்துள்ள அவர், இலங்கையின் கடன்களிற்கான சீனாவின் பங்களிப்பு சர்வதேச மூலதனச்சந்தை பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகளை காட்டிலும் குறைவானது எனவும் தெரிவித்துள்ளார்.
அதோடு இலங்கைக்கு சீனா குறைந்த வட்டிவீதங்கள் கொண்ட நீண்ட கால முதிர்ச்சியுடனான முன்னுரிமை கடன்களையே வழங்குகின்றதாகவும், இது இலங்கையின் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை வளப்படுத்த உதவியது எனவும் அவர் (Zhao Lijian) கூறினார்.
மேலும் சர்வதேச கடன்கொடுப்பனவுகளை வழங்குவதை நிறுத்துவதாக இலங்கை அறிவித்த பின்னர், சீனாவின் நிதிநிறுவனங்கள் இலங்கை தரப்பை அணுகி சீனா தொடர்பான முதிர்ச்சியடைந்த கடன்களை கையாள்வதற்கான சரியான வழிகளை கண்டறிவதற்கும் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்குமான வழிவகைளை தெரிவித்ததாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் (Zhao Lijian) இதன்போது தெரிவித்தார்.