O/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்; நீடிக்கப்பட மாட்டாது
2025(2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் 9ஆம் திகதியின் பின்னர் எக்காரணத்துக்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதியிலிருந்து சாதாரண பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்கான இறுதித் திகதி இம்மாதம் 9ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்ப முடிவு திகதி இனி நீடிக்கப்பட மாட்டாது என்பதால் இறுதி திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் கட்டாயமானது என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இது தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருந்தால் 0112784208/0112784537/0112785922 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் ஊடாகவும் அல்லது 0112784422 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாகவும், gceolexams@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான தினங்கள் ஏற்கனவே பரீட்சை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரையும், சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரையும் நடைபெறும் என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.