பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது ; நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை பாரியளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் கோழி இறைச்சியின் விநியோகம் அதிகமாகக் காணப்படுவதால் அதன் விலை குறைவடைந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய கோழி இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான உற்பத்தி காணப்படுவதாகவும், சந்தையின் தேவைக்கேற்ப எந்தவொரு அளவிலும் கோழி இறைச்சியை விநியோகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளைக் கருத்திற்கொண்டு கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், அதனைச் சமாளிப்பதற்குப் போதுமான அளவு குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி கையிருப்பில் உள்ளதால் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ள அதேவேளை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையே விலை உயர்வுக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
கால்நடைத் தீவன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் சோளத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அதற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி ஓரளவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோழிப்பண்ணைகளை அண்டிய பகுதிகளில் சில வைரஸ் நோய்கள் பரவியமையும், நவம்பர் மாதத்தில் நிலவிய மழையுடனான காலநிலையும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடையக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் ஒரு முட்டை 39 முதல் 40 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் முட்டையின் விலை சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் எனவும், குறுகிய காலத்தில் முட்டை உற்பத்தியைப் பெருமளவில் அதிகரிப்பது சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், கால்நடைத் தீவன உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.