இரண்டு மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை ; வருமானத்தில் வீழ்ச்சி
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், சுற்றுலாத்துறை வருமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இதன்படி, 2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் கிடைத்த சுற்றுலாத்துறை வருமானம், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,659.9 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட சுற்றுலாத்துறை வருமானம், இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் 2,437.9 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

எனினும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 186.1 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட சுற்றுலாத்துறை வருமானம், இந்த ஆண்டு ஒக்டோபரில் 192.7 மில்லியன் அமெரிக்க டொலராகச் சிறிதளவு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், நவம்பர் முதலாம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 156,627 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதனுடன், 2026ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,018,931 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு மொத்தமாக 2,362,521 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இதன் மூலம், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டு மில்லியனைக் கடந்துள்ளது.
இந்த ஆண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டு மில்லியனைக் கடந்துள்ள போதிலும், அதற்கேற்ப சுற்றுலாத்துறை வருமானத்தை அதிகரிப்பது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு முன்னால் உள்ள முக்கிய சவாலாக இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.