சுவிட்சர்லாந்தின் 5ஆவது பணக்கார குடும்பமாக இடம்பிடித்த இந்திய வம்சாவளி குடும்பம்
சுவிட்சர்லாந்தின் செல்வந்த குடும்பங்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலின் குடும்பம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சுவிஸ் வர்த்தக இதழான ‘Bilanz’ வெளியிட்டுள்ள 300 செல்வந்தர்களின் பட்டியலில் லக்ஷ்மி மிட்டல் குடும்பத்தின் சொத்து மதிப்பு 27 முதல் 28 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது அமெரிக்க டொலர் மதிப்பில் சுமார் 32 முதல் 33 பில்லியன் டொலர்களாகும். கடந்த நவம்பர் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில், முதல் முறையாக இடம்பெற்றுள்ள மிட்டல் குடும்பம் நேரடியாக ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 26 முதல் 27 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் சொத்து மதிப்பைக் கொண்டுள்ள சஃப்ரா (Safra) வங்கிக் குடும்பத்தை மிட்டல் குடும்பம் முந்தியுள்ளது.
76 வயதான லக்ஷ்மி மிட்டல், உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆர்சிலர் மிட்டல் (ArcelorMittal) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றி வருகின்றார்.
2025ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து தனது சட்டபூர்வ வதிவிடத்தை சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற மலைப்பிரதேசமான செயின்ட் மோரிட்ஸ் நகருக்கு மாற்றியிருந்தார்.
பிரித்தானியாவில் செல்வந்த வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் நீக்கப்பட்டமை மற்றும் வாரிசு வரி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அவரது இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
லக்ஷ்மி மிட்டல் குடும்பத்தின் செல்வத்தின் பிரதான ஆதாரமாக லக்சம்பேர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் விளங்குகின்றது.
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவரது மகன் ஆதித்யா மிட்டல் செயற்பட்டு வருகின்றார். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எஃகு உற்பத்தி ஆலைகளையும் இரும்புத் தாது சுரங்கங்களையும் இந்நிறுவனம் நடத்தி வருகின்றது.
ஆப்பிரிக்காவிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் லைபீரியா உள்ளிட்ட நாடுகளில் தனது வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்தியாவின் கொல்கத்தாவில் வளர்ந்த லக்ஷ்மி மிட்டல், 1970களில் இந்தோனேசியாவில் தனது முதலாவது எஃகு வணிகத்தை ஆரம்பித்தார்.
பின்னர் நஷ்டத்தில் இயங்கிய பல எஃகு ஆலைகளைக் கையகப்படுத்தி தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக 2006ஆம் ஆண்டு ஐரோப்பாவின் முன்னணி எஃகு நிறுவனமான ஆர்சிலர் நிறுவனத்தைக் கையகப்படுத்தி, ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தை உருவாக்கினார்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் செல்வந்த குடும்பங்களின் பட்டியலில் முதல் ஆண்டிலேயே ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள மிட்டல் குடும்பத்தின் சொத்து மதிப்பும் உலகளாவிய வர்த்தகச் செல்வாக்கும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.