இலங்கையில் உர மூட்டையின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டில் நாளைய தினம் முதல் எம்.ஓ.பி உர மூட்டையின் விலை 1000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர Mahinda Amaraweera தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், 50 கிலோகிராம் கொண்ட எம்ஓபி உர மூடையின் விலை நாளை முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்பட்டு 14000 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (14-07-2023) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் சிறுபோக பயிற்செய்கையின் போது ரூபா 22,000க்கு மேல் இருந்த எம்ஓபி (பொட்டாசியம் க்ளோரைட்) உரத்தின் விலை ரூபா 19,500 ஆக குறைக்கப்பட்டதுடன், தொடர்ந்தும் உரத்தின் விலையை மேலும் 4,500 ரூபாவினால் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கமநல சேவை நிலையங்கள் ஊடாக தற்போது ஒரு மூட்டை ரூபா 15,000 இற்கு விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், நாளைய தினம் முதல் எம்ஓபி உரத்தின் விலை 1000 ரூபாவினால் குறைக்கப்பட்டு ரூ.14,000 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.