வெளியுறவுக் கொள்கையில் விரைவில் மாற்றம்: ஜனாதிபதி ரணில்
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தியதலாவை இராணுவக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமைதியை ஏற்படுத்தல், காலநிலை மாற்றம் மற்றும் பல்வேறு உலகளாவிய தாக்கங்கள், இலங்கையின் சர்வதேச உறவுகளின் மூலோபாயத்தின் மையத் தூண்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தருவது அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக்குழு பணிகளில் இலங்கை இராணுவத்தினர் இணைந்தால், அது இலங்கை இராணுவத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.