மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் வருமா? தீர்வு தேடும் ஆலோசனை
2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டண மீளாய்வு தொடர்பில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (மே 6) பங்குதாரர்களுக்கான பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் மின்சார உற்பத்திச் செலவு கூடியுள்ளதாக தேசிய கட்டமைப்புச் செயற்பாட்டாளர் (National System Operator) சமர்ப்பித்துள்ள திருத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த மீளாய்வு நடைபெறுகின்றது.

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டண மீளாய்வு தொடர்பான பொது ஆலோசனைக்கான வாய்மொழி அமர்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான திருத்தப்பட்ட மின்சார உற்பத்திச் செலவு மீதான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெறுவது இதன் முக்கிய நோக்கமாகும்.
தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையை எதிர்நோக்கிய போதிலும், பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்கியுள்ளது.
அனைத்துக் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மே 9ஆம் திகதி இறுதி முடிவை அறிவிக்கவுள்ளது.