சபாநாயகருக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சமிந்த குலரத்ன முறைப்பாடு!
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற முன்னாள் பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இன்று கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
சபாநாயகருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே தான் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், சபாநாயகரின் ஊழல் நடவடிக்கைகள் குறித்தும் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக சமிந்த குலரத்னவில் சட்டத்தரணி தெரிவித்தார்.

இது குறித்துக் கருத்து தெரிவித்த சட்டத்தரணி மிதுன் டயஸ், தனது சேவைபெறுநர் இந்த முறைப்பாட்டை அரசாங்கத்திற்கு எதிராக அல்லாமல், சபாநாயகரின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகவே தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த முறைப்பாடு குறித்து கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுக்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன அண்மையில் நாடாளுமன்றத்தின் பணியாளர் ஆலோசனைக் குழுவினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.