நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக் கப்பல் சேவை
தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் புதிய சரக்குக் கப்பல் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த இரண்டு துறைமுகங்களுக்குமிடையே நிரந்தரமான தொடர் சேவையை வழங்குவதற்காக ஏ & என் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 700 மெட்ரிக் தொன் எடை கொண்ட ‘தாரா கிரண்’ என்ற கப்பலை தயார்படுத்தியுள்ளது.
கடலில் பயணிக்கும் தகுதி மற்றும் பிற சான்றிதழ்களை பெறும் செயல்முறைகள் பெப்ரவரி மூன்றாவது வாரத்துக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் முதல் பயணம் மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகால உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிபுணத்துவத்துடன் அந்தமானில் தலைமையகத்தைக் கொண்ட ஏ&என் லாஜிஸ்டிக்ஸ் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு நம்பகமான மற்றும் திறமையான இடப்பெயர்வு தீர்வுகளை வழங்கி வருகிறது.
2024 முதல் இலங்கை அடைந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கவனித்த ஏ & என் லாஜிஸ்டிக்ஸ் இயக்குனர்கள் குழு தென்னிந்தியாவுக்கும் இலங்கையின் வடக்குக்கும் இடையிலான வணிக நடவடிக்கைகளை நேரடியாக மீண்டும் நிறுவும் வகையில் இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிறுவனமானது மார்ச்சில் இந்த இரண்டு இடங்களுக்கும் இடையிலான ஒரு பயணிகள் படகுச் சேவையையும் ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது.
ஏ & என் லாஜிஸ்டிக்ஸின் உள்ளூர் நிறுவனம் கே. கே. எஸ். டெர்மினல் ஆப்ரேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகும். மேலும் தகவல்கள் பெற உள்ளூர் நிறுவனத்தை 071 798 8928 அல்லது 077 379 3368 என்ற எண்களில் தொடர்பு கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.