கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்
கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடைபெறும் வரை பொலிஸ் நிலைய பிணவறையில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.
32 வயதான குறித்த பெண் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் பெண், வவுனிக்குளம் - அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைய நேற்று (20) இரவு மருதானை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், சிறைச்சாலையின் இரும்புக் கதவில் தனது பாவாடையைக் கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மருதானை பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.
அவர் தொங்கியிருந்த ஆடையை துண்டித்து, உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருதானை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனினும், தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்தப் பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதவான் இன்று (22) நேரில் சென்று விசாரணை நடத்தினார்.