கம்போடியா நெருக்கடியின் பின்னணி ; இலங்கையை நோக்கி நகரும் மோசடி வலையமைப்புகள்
கம்போடியாவில் இணையவழி மோசடி கும்பல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கடுமையான சோதனைகள் காரணமாக, சர்வதேச இணையவழி மோசடி வலையமைப்புகள் தங்களது நடவடிக்கைகளை இலங்கையிலுள்ள கடற்கரை விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகக் கட்டடங்களை நோக்கி மாற்றி வருவதாக புலனாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகளவில் வேகமாக விரிவடைந்து வரும் இணையவழி மோசடி தொழிலின் அடுத்த கட்டமாக இந்த நகர்வு பார்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் விசா இல்லாத பயண வசதி, தேவையான கட்டிட வசதிகள், ஒப்பீட்டளவில் வலுவான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு மற்றும் முறைசாரா பணப்பரிமாற்ற அமைப்புகள் காணப்படுவது போன்ற காரணிகளால், மோசடி கும்பல்களுக்கு இலங்கை சாதகமான நாடாக மாறியுள்ளதாக புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் புதிய இணையவழி குற்றப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டில் மட்டும் மேற்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் கொழும்பில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் பிரெட்ரிக் வூட்லர், இந்த மோசடி வலையமைப்புகளை கட்டுப்படுத்த காவல்துறை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், மத்திய வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் சட்ட அமுலாக்கத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக மோசடி கும்பல்கள் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி தங்கியிருந்து தங்களது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இலங்கையின் புலனாய்வு அறிக்கைக்கான மையத்தின் பணிப்பாளர் தில்ருக்ஷி ஹந்துந்நெத்தி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இணையவழி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கொழும்புக்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 120 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
காவல்துறையின் கண்காணிப்பும் நெருக்குதலும் அதிகரித்து வருவதால், மோசடி கும்பல்கள் பெரிய வளாகங்களை விட்டு வெளியேறி, குறுகிய காலத்திற்கு வாடகைக்கு பெறக்கூடிய விருந்தகங்கள், குடியிருப்புகள் மற்றும் அலுவலக இடங்களை தங்களது புதிய தளங்களாக பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய மோசடி மையங்களில் இருந்து தப்பியவர்கள் கூட இலங்கையில் உள்ள சந்தேகத்திற்கிடமான மையங்களில் பணியாற்றி வரக்கூடும் என மோசடி புலனாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியம், திமோர்-லெஸ்தே, பிஜி மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளுக்கு அடுத்தபடியாக தற்போது இலங்கையிலும் இத்தகைய மோசடி வலையமைப்புகள் பரவி வருவது, சர்வதேச குற்றக் குழுக்களின் உலகளாவிய விரிவாக்கத்தை வெளிப்படுத்துவதாக அவதானிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.