பொலிஸாரின் திடீர் சோதனையில் அம்பலம் ; டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய்யுடன் பயணித்த பேருந்து
மொனராகலை புத்தல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலிருந்து பேருந்தின் எரிபொருள் தொட்டியில் (Tank) டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் நிரப்பிக் கொண்டு வருவதாக தனமல்வில காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவலுக்கு அமைய, கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தனமல்வில காவல் நிலையத்திற்கு முன்பாக வைத்து காவல்துறையினரால் சோதனையிடப்பட்டு, அத்துமீறிய எரிபொருள் பயன்பாட்டின் கீழ் காவல்துறையினரால் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தின் எரிபொருள் தொட்டியைப் பரிசோதித்த போது, அதில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் உடனடியாக பிறிதொரு மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட பேருந்து தற்போது காவல் நிலையத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இதனை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 48 வயதுடைய பேருந்தின் சாரதியும், 35 வயதுடைய நடத்துனரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் மொனராகலை பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தற்போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதுடன், தனமல்வில காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.