இலங்கையில் மந்திர இளநீரால் தாயையும் மகளையும் கதி கலங்க வைத்த சம்பவம் ; பேருந்து காதலனால் வந்த வினை
பேருந்து பயணத்தில் அறிமுகமான நபர் ஒருவர், காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை புகட்டி, இளநீரில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடமிருந்து 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை மோசடி செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் சீகிரியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதிக்கு பேருந்து பயணத்தின் போது அறிமுகமான நபர், தன்னை ஒரு நற்பண்பு மிக்கவராகக் காட்டி அவரது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுள்ளார்.

மோசடி கும்பல்
யுவதியின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, தனது தாய் மற்றும் சகோதரி என இரு பெண்களைத் தொலைபேசியில் பேச வைத்து ஒரு போலி குடும்பச் சூழலை அந்த நபர் உருவாக்கியுள்ளார்.
யுவதியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதைத் தெரிந்துகொண்ட மோசடி கும்பல், அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.
"கெகிராவ பகுதியில் ஒரு சக்திவாய்ந்த சாமியார் இருக்கிறார், அவர் மந்திரிக் கொடுக்கும் இளநீரை அருந்தினால் தீராத நோயும் தீரும்" என நம்ப வைத்து, தாய் மற்றும் மகளை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இலங்கை வந்த இளம் இந்திய தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; விமான நிலையத்தை பரபரப்பாக்கிய சம்பவம்
குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும், அங்குள்ள நபர்களால் வழங்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட இளநீரை அருந்திய தாய் மற்றும் மகள் இருவரும் சில நிமிடங்களிலேயே மயக்கமடைந்துள்ளனர்.
அவர்கள் மயக்கமடைந்ததை அடுத்து, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது போல நடித்த கும்பல், அவர்கள் அணிந்திருந்த 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சீகிரியா மற்றும் கெகிராவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது இடங்களில் அறிமுகமாகும் அடையாளம் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், குறிப்பாக மர்ம நபர்கள் தரும் பானங்கள் மற்றும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் அண்மைக் காலமாக இது போன்ற நூதன மோசடிகள் அதிகரித்து வருவதால், பெண்கள் தங்க நகைகளை அணிந்து கொண்டு வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் போது கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.