பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணங்களை தொடர்பில் வெளியான தகவல்
எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணங்களை குறைக்க முடியாது என பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய சனிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 ஒக்டென் பெற்றோலின் விலை 12 ரூபாவினாலும், 95 ஒக்டென் பெற்றோலின் விலை 2 ரூபாவினாலும், சுபர் டீசலின் விலை 10 ரூபாவினாலும், லங்கா டீசலின் விலை 3 ரூபாவினாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், தற்போதைய எரிபொருள் விலைக்குறைப்புக்கு அமைய பேரூந்து கட்டணத்தின் விலையை குறைக்க முடியாது.
வருடாந்த எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாகவே பேருந்து கட்டணம் குறைக்கப்படும். கடந்த ஜூலை மாதம் கட்டணம் குறைக்கப்பட்டது.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் வருடாந்த விலை சூத்திரத்துக்கு அமைய கட்டணம் மறுசீரமைக்கப்படும். தற்போதைய விலை கட்டணத்துக்கு அமைய பேருந்து கட்டணத்தை மறுசீரமைப்பது சாத்தியமற்றது.
கட்டண குறைப்பு எமது சேவைத்துறையின் திட்டமிடலுக்கு அமைய 4 சதவீதமாக இருத்தல் வேண்டும். ஆகவே தற்போது கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளா்ர.
அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், முச்சக்கர வண்டியின் உதிரிபாகங்களின் விலை குறைவடையாத நிலையில் எரிபொருள் விலையை மாத்திரம் குறைப்பதால் எவ்வித பயனும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும், பயணிகளுக்கும் கிடைப்பதில்லை.
மாதாந்த விலை சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலைகளை மறுசீரமைப்பதால் நிலையான கட்டணத்தை அமுல்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
தற்போதைய விலை குறைப்புக்கு அமைய முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் போது உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் ஊடகங்களுக்கு குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் உணவு பொருட்களின் விலைகள் ஏதும் குறைக்கப்படவில்லை.ஆகவே நுகர்வோர் அதிகார சபை நித்திரையில் இருந்து எழ வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.