நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இனிமேல் சோறு பொதி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்,ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு போஷாக்குடன் கூடிய குறைந்த விலையில் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.
சோறு பொதி
இதனடிப்படையில் நாடாளுமன்ற உணவகத்தில் தாமே பகிர்ந்துக்கொள்வதற்கு (Buffet)பதிலாக குறைந்த விலையில் சமைக்கப்பட்ட பொதி சோறு வழங்க முடியுமா என்பது தொடர்பில் சபாநாயகர் ஆராய்ந்து வருகிறார்.
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தின் உணவு தொடர்பாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் காரணமாக சபாநாயகர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக சபாநாயகர் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.
உணவு வேண்டாம் என மறுத்த ஆளும் கட்சியினர்
இதனிடையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 53 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு நாடாளுமன்றத்தில் வழங்கும் உணவை நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டு வந்த மதிய உணவை மறுதினமே நிறுத்த சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அது பற்றி நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக அடுத்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
உணவுக்கு மட்டும் 12 கோடி ரூபாய் செலவு
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான உணவு, பானங்களுக்கே அதிக பணம் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
உணவு மற்றும் பானங்களுக்காக வருடந்தோறும் 12 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக நாடாளுமன்றத்தின் நிதி தொடர்பான பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாடாளுமன்றத்தின் குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீருக்காக 90 லட்சம் ரூபாய் செலவிடப்படுவதக கணக்கிடப்பட்டுள்ளது.