இராமர் பாலத்தைப் பார்வையிட விசேட படகு சேவை
மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, படகு சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில்போது எடுக்கப்பட்டுள்ளதுடன், படகு சேவைக்கான கட்டண அறவீட்டை வன ஜீவராசிகள் திணைக்களத்தினூடாக முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
கருத்து முரண்பாடு
இந்நிலையில், குறித்த நடவடிக்கை தொடர்பாக மன்னார் பிரதேசசபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்களுடன், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அரசாங்க அதிபர் இடையிலான சந்திப்பொன்று மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது கட்டண அறவீடு தொடர்பில், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மன்னார் பிரதேசசபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
இதனையடுத்து, பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று, வேறொரு நாளில் கூட்டத்தை நடத்தி இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக மன்னார் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.