திருமணத்திற்குத் தடையாக இருந்த ஒன்றரை வயது குழந்தை ; தரையில் அடித்துக் கொன்ற கொடூரம்
இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் மாநிலத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், திருமணத்திற்குத் தடையாக இருந்ததாகக் கூறி ஒன்றரை வயது குழந்தை தரையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின்படி, ஃபிரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் இடையே விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுக்கு ஒன்றரை வயது மகன் ஒருவர் இருந்துள்ளார்.
மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி அழைப்பு
இந்நிலையில், குழந்தையின் தாயாருக்கும் அவரது அத்தை மகனுக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அத்தை மகன் வற்புறுத்தியபோது, குழந்தையைக் காரணம் காட்டி தாயார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, தாயார் தனது அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்த அத்தை மகன் குழந்தைக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, வழியிலேயே குழந்தையை தரையில் பலமுறை அடித்து கொலை செய்ய முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதை அடுத்து, சந்தேகநபர் குழந்தையை சிறிது தூரம் கொண்டு சென்று வீதியோரத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்காக நான்கு விசேட குழுக்களை அமைத்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, மைன்புரி வீதி அருகே சந்தேகநபரை சுற்றிவளைத்தபோது, அவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அவர் மீது ஷிகோஹாபாத் பொலிஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.