தொலைபேசி மோகத்தால் சகோதரியை கொலை செய்த சகோதரன் ; சிறுமியின் சகோதரன் கைது
மட்டக்களப்பு - ஏறாவூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தண்ணீர்த் தொட்டியிலிருந்து, 11 வயதுடைய சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணை
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், சிறுமி தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று தந்தையார் வெளியில் சென்றிருந்த போது, வீட்டிலிருந்த சிறுமிக்கும் அவரது சகோதரனுக்கும் இடையே டிக்டொக் காணொளி பார்ப்பதற்காகத் கைத்தொலைபேசியைப் பகிர்ந்துகொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
கைத்தொலைபேசியைக் கொடுக்க மறுத்தமையால் ஏற்பட்ட மோதலே இந்த மரணத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் சகோதரன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், சிறுமியின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த இறுதித் முடிவுகளை அறிந்துகொள்வதற்காகப் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.