பயங்கரவாத அச்சுறுத்தல் நிவர்த்தி தொடர்பில் இலங்கை மீது பிரித்தானியா நம்பிக்கை
இலங்கை அதிகாரிகள் விரைவில் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வார்கள் என இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதேநேரம், இலங்கை அரசாங்கத்திற்கு அதன் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்தத் தகவலை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் நேற்று ஆங்கிலச் செய்திச் சேவை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், தாக்குதல் அச்சுறுத்தல் தீர்க்கப்பட்டவுடன் இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை மறுபரிசீலனை செய்யும். எனினும், பயண ஆலோசனை முழுமையாக நீக்கப்படுமா அல்லது ஓரளவு நீக்கப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை.
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான பல நாடுகளில் சாத்தியமான பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக எச்சரிக்கும் பயண ஆலோசனைகள் பொதுவானவை.
ஸ்பெயின் மற்றும் தாய்லாந்து உட்பட, சாத்தியமான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து பல நாடுகளில் இது போன்ற எச்சரிக்கைகள் உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, தாக்குதல் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.