பெற்றோல் குண்டு தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்
களுத்துறை, ரஜவத்த, கமகொட வீதியிலுள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரஜவத்த, கமகொட வீதியிலுள்ள வீடொன்றிற்கு கடந்த சனிக்கிழமை (29) இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த சிறுவன்
பெற்றோல் குண்டு தாக்குதலின் போது 28 வயதுடைய பெண்ணும் 06 வயதுடைய சிறுவனும் தீக்காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த சிறுவன் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் தாய் வெளிநாட்டில் உள்ள நிலையில், தந்தை தினமும் வேலைக்கு செல்வதால், பெற்றோல் குண்டு தாக்குதலில் காயமடைந்த பெண்ணே சிறுவனை பராமரித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.