ICC T20 உலகக் கிண்ணம் 2026 ; டிக்கெட் விற்பனை ஆரம்பம்
ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் 2026 தொடருக்கான அனுமதிச் சீட்டு விற்பனை நிலையங்கள் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி இன்று (3) முதல் இந்த விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் இடங்களில் விசேட விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன:
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகம்: பெப்ரவரி 3 முதல் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும்.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம்: பெப்ரவரி 4 முதல் போட்டிகள் இல்லாத நாட்களில் மாத்திரம் நுழைவாயில் 1-இல் திறந்திருக்கும்.

ஒருகொடவத்த விற்பனை நிலையம்: ஆர். பிரேமதாச மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் நாட்களில் மாத்திரம் திறந்திருக்கும்.
கண்டி - பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம்: பெப்ரவரி 7 முதல் போட்டிகள் இல்லாத நாட்களில் மாத்திரம் நுழைவாயில் 5-இல் திறந்திருக்கும்.
அபிதா மைதானம், பலகொல்ல: பல்லேகல மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் நாட்களில் மாத்திரம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விற்பனை நிலையங்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயற்படும். நுழைவுச்சீட்டுகள் ரூபா 1,000 முதல் ரூபா 10,000 வரையான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு நபர் இலங்கை பங்குபற்றும் போட்டிகளுக்கு அதிகபட்சம் 4 நுழைவுச்சீட்டுகளையும், ஏனைய போட்டிகளுக்கு அதிகபட்சம் 10 நுழைவுச்சீட்டுகளையும் இணையத்தளம் அல்லது விற்பனை நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.