பின்னங்கால்கள் இரண்டையும் வெட்டிக் கடத்த முயற்சி ; ரயில் நிலையத்துக்கு அருகில் மீட்கப்பட்ட மாடு
தியத்தலாவை ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று (14) இரவு மாடு ஒன்றை கடத்திச் செல்லும் திட்டம் தோல்வியடைந்தது.
மாட்டைக் கடத்திச் சென்று இறைச்சிக்காகப் பயன்படுத்தும் நோக்கில், பின்னங்கால்கள் இரண்டையும் வெட்டி, வயிற்றுப் பகுதியில் ஒரு மரக்கட்டையைச் செலுத்தி கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், அந்த மாடு கடுமையாகக் காயமடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விலங்கு கடத்தல்
இதனையடுத்து, ரயில்வே ஊழியர்களும் அப்பகுதி மக்களும் ஒன்றிணைந்து, காயமடைந்த மாட்டுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிகக் கொட்டகை ஒன்றை அமைத்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த மாட்டுக் கொட்டகைக்கு சென்ற தியத்தலாவை கால்நடை வைத்தியர், மாட்டுக்குச் சிகிச்சை அளித்து வருவதாகத் தெரிகிறது.
தியத்தலாவை நகரப் பகுதியில் சுதந்திரமாக நடமாடும் மாடுகள் இறைச்சிக்காக தொடர்ச்சியாகக் கடத்தப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற சட்டவிரோத விலங்கு கடத்தல் நடவடிக்கைகளில் சில முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என தியத்தலாவை பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்காக தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கால்நடைகளுக்கு எதிரான இத்தகைய கொடூரச் செயல்களைத் தடுத்து நிறுத்தவும், சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.