கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு ; பின்னணி குறித்து வெளியான தகவல்
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி 6ஆவது தெருவில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கணவன், மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த குறித்த தம்பதியினர் சம்பவத்தையடுத்து உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் 51 வயதுடைய சந்தேகநபர், பல துப்பாக்கிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனான குறித்த திருமணமாகாத சந்தேகநபரிடம் இருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 12 போர் ரக துப்பாக்கி, அதற்கான இரண்டு தோட்டாக்கள் மற்றும் இரண்டு வாயு ரைபிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசாரணைகளின்படி, காயமடைந்த பெண்ணுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்த நெருங்கிய தொடர்பே சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்துக்கு முந்தைய இரவு குறித்த பெண் மற்றொரு இளம் பெண்ணை சந்தேகநபரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தின் பின்னணி தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குடியிருப்பு வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.